கவிதை அரங்கு - விக்னேஷ் ஹரிஹரன்

 ஓவியச்சீலைக்கான கரு

படைத்தலைவனிடம் எண்பதுபேர் மட்டுமே இருக்கிறார்கள். எதிரியிடம் ஐயாயிரம். தனது கூடாரத்துக்குள் தலைவன் புலம்பி அழுகிறான். பிறகு, உத்வேகமளிக்கும் பிரகடனத்தை எழுதுகிறான். அதன் பிரதிகளை வளர்ப்புப்     புறாக்கள் எதிரி வட்டாரத்தின்மேல் பொழிகின்றன. இருநூறுபேர் இவன்      தரப்புக்கு இடம்பெயர்கிறார்கள். அப்போது தொடங்கும் சிறு மோதலில்     தலைவன் எளிதாக வெற்றிபெறுகிறான். இரண்டு படையணிகள் இவன்   பக்கம் வருகின்றன. மூன்று நாள் கழித்து, எதிரியிடம் எண்பது பேர், இவனிடம்   ஐயாயிரம் பேர் என்று ஆகிறது. இன்னொரு பிரகடனம்    எழுதுகிறான்.      எழுபத்தொன்பது பேர் இந்தப் பக்கம் சேர்கிறார்கள்.     ஒரேயொரு எதிரி மட்டுமே எஞ்சியிருக்கிறான். தலைவனின் படை       சூழ்ந்திருக்க,       அமைதியாகக் காத்திருக்கிறான். இரவு கழிந்துவிட்டது,      ஆனாலும் அந்த    எதிரி இந்தத் தரப்புக்கு வந்துசேரவில்லை. தலைவன்     தனது கூடாரத்துக்குள்       புலம்பி அழுகிறான். வைகறை வேளையில், எதிரி   தன் வாளை நிதானமாக உருவிக்கொண்டு தலைவனின் கூடாரத்தை   நெருங்குகிறான். உள்ளே     சென்று படைத்தலைவனை நோக்குகிறான்.   தலைவனின் போர்ப்படை கலைகிறது. சூரியன் எழுகிறான்.

                                          ஜூலியோ கொர்த்தஸார்

'Theme for a Tapestry' ( நிலவைச் சுட்டும் விரல் 2023)

மொழிபெயர்ப்பு: யுவன் சந்திரசேகர்

                                         

 

"நானே கடைசி..."

நானே நெப்போலியனின் கடைசிப் படைவீரன். கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் கடந்தும் நான் இன்னமும் மாஸ்கோவிலிருந்து பின்வாங்கிக்கொண்டே இருக்கிறேன். வெள்ளை பிர்ச் மரங்கள் அணிவகுத்திருக்கும் சாலையில் சகதியோ என் முட்டியளவு. அந்த ஒற்றைக் கண் பெண்மணி என்னிடம் ஒரு கோழியை விற்கப் பார்க்கிறாள், என்னிடமோ உடுத்த உடைகளும் இல்லை.

ஜெர்மானியர்கள் ஒரு திசையில் சென்று கொண்டிருக்கின்றனர்; நான் மறு திசையில். ருஷ்யர்களோ கையசைத்தபடி அதனினும் வேறு திசையில் சென்று கொண்டிருக்கின்றனர். என்னிடம் ஒரு சம்பிரதாயமான கொடுவாள் இருக்கிறது. அதைக் கொண்டே நான் என் நான்கு அடி நீளமுள்ள முடியை வெட்டுகிறேன். 

 

சார்லஸ் ஸிமிக்

'I am the last...' (உலகம் முடிவதில்லை - 1987)

மொழிபெயர்ப்பு: விக்னேஷ் ஹரிஹரன்

 

விட்டுப்போன நரி

 

குதிரையாகாமல்

விட்டுப்

போனதில் ஒருவன் சாமீ

குதிரையாகாமல்

விட்டுப்

போனதில் ஒருவன் சாமீ

 

மேற்படிக்

குரலைக் கேட்டார்

மாதொரு

பாகர். குற்றம்

ஏற்பட

வியந்தார். தேவி

ஏளனம்

செய்தாள் சற்று

 

"வாதவூரடிகட்காக

நரிகளைத் தேர்ந்தபோது

நீதியோ என்னை மட்டும்

விலக்கிய செய்கை சாமீ!"

 

திருவருட்

திட்டம் பொய்த்த

தற்கொரு

ஊளைச் சான்றாம்

நரி எதிர்

உதித்துக் கீற்று

நிலாத்திகழ்

ஈசர் சொன்னார்:

 

நரிகளைப் பரிகளாக்கும்

திருவிளையாடல் முற்றும்

விடுபட்ட பேரை நாங்கள்

கவனிக்க மாட்டோம் போய்வா

ஞானக்கூத்தன்

ஞானக்கூத்தன் கவிதைகள் (2018)

Share:

0 comments:

Post a Comment

Blog Archive