காத்திருப்பும் திரும்புதலும்
1
அம்மா வந்துவிடு - இளங்கோ கிருஷ்ணன்
கொட்டித் தீர்க்கிறது பேய் மழை
எங்கும் மென்னிருள்
விரைவில் அடரக்கூடும்
நடுவழியில் அந்தகாரத்தில்
நின்றுகொண்டிருக்கிறேன்
பார்த்துக்கொண்டிருக்கும்போதே
இடியிறங்கிய மரம் பற்றி எரிகிறது
இந்தப் பாழடைந்த மண்டபமோ
காற்றில் கூகூவெனக் கதறுகிறது
நெடுவழித் தனியனுக்கு யாருமில்லை
இன்னும் எவ்வளவு நேரம்
காத்திருப்பது
அம்மா வந்துவிடு
2
கதவு - இளங்கோ கிருஷ்ணன்
திறக்கப்படாத கதவின் முன்
நெடுங்காலமாய் காத்திருக்கிறாய்
கதவின் பின்புறம் அவ்வபோது
உறும்
பேச்சொலிகளும் சிரிப்பொலிகளும்
அங்கு யாருமில்லை எனக்
கருதிவிடாது பார்த்துக்கொள்கின்றன
அயர்விலும் ஆற்றாமையிலும்
திரும்பிச் செல்ல
எத்தனிக்கும் கனந்தோறும்
கதவு நோக்கி வரும் காலடியோசையொன்று
உன் காத்திருப்பின் எல்லைகளை நீட்டிக்கிறது
திறக்கப்படாத கதவின் முன்
நெடுங்காலமாய் காத்திருக்கிறாய்
3
போகன்
பல தருணங்களில்
நான் செல்ல வேண்டிய சொல்லுக்கு
முந்தைய சொல் வரை
என்னால் சொல்ல முடிந்திருக்கிறது.
ஆனால் அந்தச் சொல்லை அல்ல
செல்ல வேண்டிய இடத்துக்கு
மிக அருகில் போய் திரும்பியிருக்கிறேன்
ஏதோ ஒன்று
ஒரு சுவர் போன்ற
ஜவ்வுத் திரை போன்ற
மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்கும்போது
எந்தத் தடையுமின்றி
பாதை தெளிவாக இருப்பது போல்
தோற்றத்தைத் தரக்கூடிய
நாம் அந்த இறுதித் துளியை
ருசித்துவிட முடியும்
என்று ஏமாற்றுகிற
ஏதோ ஒன்று
இங்கு இருக்கிறது
4
குழந்தை - இளங்கோ கிருஷ்ணன்
எப்போதோ திரும்பிச் சென்றிருக்க வேண்டிய
குழந்தையது
தவறான நம்பிக்கையின் வழிகாட்டுதல்
அதனை நிற்கச் செய்திருக்கிறது
சலனமின்மையும்
நிராகரிப்பும் அடர்ந்த கடைக்காரனின்
முகத்தைக் கண் திரளப் பார்க்கிறது
தன் கனவு மிட்டாயின் உருவம் ஏக்கமாய் இறுக
போதாத நாணயம் கொண்ட
தன்னை நிந்திக்கவும் அறியாத
அதன் பிரச்சனை திரும்பிச் செல்வதல்ல
வெறுங்கைகளுடன் திரும்பிச் செல்வதே
எப்போதோ திரும்பிச் சென்றிருக்க வேண்டிய
குழந்தையது
தவறான நம்பிக்கையின் வழிகாட்டுதல்
அதனை நிற்கச் செய்திருக்கிறது.
5
மயக்குவித்தைக்காரன் பின் செல்லும் சிறுமி - இசை
எது உன்னை ஈர்த்தது அவ்விடம் நோக்கி
வசீகரம் கூடிய மாயக்கரங்கள்
வாவென்றழைக்க, கிளம்பிவிட்டாய்
மயக்கு வித்தைக்காரன் பின் செல்லும் சிறுமி நீ
சரளைக்கற்களின் மீது
மேடான மேட்டில்
எதற்கிந்த நடை
வியர்வைப் பெருக்கில் ஆடைகள் நவநவத்துவிட்டன
நீ சலித்து ஓயும் ஒவ்வொரு வேளையிலும்
அது தன் வனப்பின் சின்னஞ்சிறு துளியை
உன்மீது தெளிக்கிறது
நீ மறுபடியும் சிறுமியாகிறாய்
வேண்டாம் இவ்வலி என்று சொன்னால்
பாதி தூரம் வந்துவிட்டேனே
எனக் கலங்கும் நண்பா
அரவக்குட்டிகள் பதுங்கிக் கிடக்கும்
காட்டுவழி துவங்குகிறது
நல்லதற்கே சொல்கிறேன்
இப்போதேனும் திரும்பிப் போ
For Further Reading
(Will not to be discussed in mugam)
6
Wisława Szymborska (Female) (1996 – Nobel Prize in Literature)
தலைப்பு: வீடு திரும்புதல்
அவர் திரும்பிவிட்டார், ஏதும் பேசவில்லை
ஆனால் ஒன்று நிச்சயம்
ஏதோ ஒன்று அவரை மனமுடைந்து போகச்
செய்துவிட்டது
அவர் அறைக்கட்டிலில் விழுந்திருக்கிறார்
முழங்கால்களைத் தூக்கி வைத்துக் கொண்டு
போர்வையின் கீழ் முகத்தைப் புதைத்து வைத்துக்
கொண்டு
அவருக்கு நாற்பது வயதாகிறது ஆனால் அது
இந்த நொடியில் அல்ல
அவர் இருக்கிறார்
அவர் தாயின் வயிற்றில் இருந்த அந்த மாதிரி
ஏழு சருமங்களின் மடிப்புகளுக்கு அப்பால்
பாதுகாக்கப்பட்ட இருளில்
நாளை அவர்
Homostasis MetaGalactic Space Travel பற்றி
விரிவுரையாற்றுகிறார்
ஆனால் இப்போது சுருண்டு படுத்துக் கொண்டு
தூங்கிப் போய்விட்டார்.
7
திரும்புதல் - இளங்கோ கிருஷ்ணன்
உறக்கத்திலிருந்து
விழிப்புக்கு வருவது போல
உன் பகையிலிருந்து
அன்புக்கு வருகிறேன். ஏதும் நடவாததாய்
புன்னகைத்துக் கொண்டிருக்கிறாய்
எல்லாம் வெறும் கனவா?
என்கிறேன். ஆரத் தழுவுகிறாய்
கனவில் நடந்தது
என்னவெனச் சொல்கிறேன். உண்மையில்
இதுதான் கனவு என்கிறாய். விழிப்பிலிருந்து
கனவுக்குச் செல்வது போல்
நான் பகைக்குள் நுழைகிறேன்.
***
No comments:
Post a Comment