தானே தனி நெஞ்சந் தன்னையுயக் கொள்வான்,
தானே பெருஞ்சேமம் செய்யுமால்; - தானேயோர்
பூணாகத் தாற் பொலிந்து, பொங்கழல் சேர் நஞ்சுமிழும்
நீணாகத் தானை நினைந்து. (அற்புதத் திருவந்தாதி.பா.எண். 14)
என்னுடைய நெஞ்சம் தானே தனியாக வேறு துணையின்றி இருக்கும் நெஞ்சம். இது தன்னைத் தானே உய்யக் கொள்ளும் பொருட்டு, ஒப்பற்ற, தன்னைப் பூணும் திருமேனியால் பொலிவு பெற்றுக் கொழுந்து பொங்கும் அழலின் வெம்மையைச் சேர்ந்த நஞ்சை உமிழும் நீண்ட நாகத்தை உடையவனைத் தியானம் செய்து, அவனைத் தனக்குள்ளே பெரிய சேமிப்பாகச் சேர்த்துக் கொள்ளும்.
அறிவானுந் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே-அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன்.(அற்புதத் திருவந்தாதி.பா.எண். 20)
இறைவன் எல்லாவற்றையும் அறிபவனும் தானாக இருக்கிறான். உயிர்களுக்கு அறிவிப்பவனும் அவனாகவே இருக்கிறான். அறிவாகவும் அறிகின்றவனாகவும் தானே; அறிகின்ற மெய்ப்பொருளும் அவனே; விரிந்த சுடரும் விரிந்த பாரும் விரிந்த ஆகாயமும் ஆகிய அப்பொருள்களும் அவன்.
கள்ளிக் கவட்டுஇடைக் காலை நீட்டிக்
கடைக்கொள்ளி வாங்கி மசித்து, மையை
விள்ள எழுதி, வெடுவெடு என்ன
நக்கு, வெருண்டு, விலங்கு பார்த்துத்
துள்ளி, சுடலைச் சுடுபி ணத்தீச்
சுட்டிய முற்றும் சுளிந்து, பூழ்தி
அள்ளி அவிக்க,நின் றாடும் எங்கள்
அப்பன் இடம்திரு ஆலங்காடே.(திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் -1.பா. எண் 2)
கள்ளி மரத்தின் கிளைகளுக்கு இடையல் காலை நீட்டிக் கொண்டு, எரிந்து முடிந்த கொள்ளிக் கட்டையை எடுத்து மசிய அரைத்து, அதனைத் தனது கண்ணில் மையாக எழுதி, வெடுவெடு என்று சினக்குறிப்பு தோன்றுமாறு நகைத்து, வெருண்டு விலங்குகளைப் போல இங்கும் அங்குமாகப் பார்த்து, துள்ளிக் குதித்து, சுடலையில் பிணத்தைசு சுடுகின்ற தீயை வெகுண்டு நோக்கி, அதனைப் புழுதியைக் கொண்டு அவிக்க முயலுகின்ற பேய்கள் வாழும் காட்டிலே ஆடுகின்ற எங்கள் அப்பனுக்கு இடமாக விளங்குவது திருவாலங்காடு .
நிணந்தான் உருகி நிலந்தான்
நனைப்ப, நெடும்பல் குழிகண்பேய்
துணங்கை எறிந்து சூழும்
நோக்கிச்சுடலை நவிழ்த்து, எங்கும்
கணங்கள் கூடிப் பிணங்கள்
மாந்திக் களித்த மனத்தவாய்
அணங்கு காட்டில் அனல்கை
ஏந்தி அழகன் ஆடுமே. (திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் -2.பா. எண் 2)
பிணத்தைச் சுடுவதால் கொழுப்பானது உருகி நிலம் ஈரமாகிறது. நீண்ட பற்களையும் குழிந்த கண்களையும் உடைய பேய்கள் தமது இருகைகளையும் மார்பில் அடித்தபடி ஆடி, சுடலையை மிகவும் விரும்பி, பேய்க் கூட்டமானது எங்கும் நிறைந்து பிணத்தை உண்டு களித்த மனத்தோடும் விளங்குகின்றது. இவ்வகையான துன்பத்தைத் தரும் சுடுகாட்டில் எங்கள் இறைவனாகிய அழகன் ஆடுகின்றான்.
No comments:
Post a Comment