கைகேயி சூழ்வினை/நகர் நீங்கு படலம்
1. சேண் உலாவிய நாளெலாம் உயிர் ஒன்று போல்வன செய்து, பின்
ஏண் உலாவிய தோளினான் இடர் எய்த, ஒன்றும் இரங்கிலா
வாள் நிலாநகை மாதராள் செயல் கண்டு, மைந்தர்முன் நிற்கவும்
நாணினாள் என ஏகினாள் நளிர் கங்குல் ஆகிய நங்கையே (1540)
2. தூபம் முற்றிய கார் இருட் பகை துள்ளி ஓடிட, உள் எழும்
தீபம் முற்றவும் நீத்து அகன்றென சேயது ஆர் உயிர் தேய, வெம்
பாபம் முற்றிய பேதை செய்த பகைத் திறத்தினில், வெய்யவன்
கோபம் முற்றி மிகச் சிவந்தனன் ஒத்தனன், குண குன்றிலே (1555)
3. உந்தாது, நெய் வார்த்து உதவாது, கால் எறிய
நந்தா விளக்கின் நடுங்குகின்ற நங்கைமார்,
'செந்தாமரைத் தடங் கண் செவ்வி அருள் நோக்கம்
அந்தோ! பிரிதுமோ? ஆ! விதியே! ஓ!' என்பார். (1715)
4. ஐயனைக் காண்டலும், அணங்கு அனார்கள் தாம்,
மொய் இளந் தளிர்களால் முளரி மேல் விழும்
மையலின் மதுகரம் கடியும் ஆறு எனக்
கைகளின் மதர்நெடுங் கண்கள் எற்றினார் (1772)
5. கையால் நிலம் தடவி, கண்ணீர் மெழுகுவார்
'உய்யாள் போல் கோசலை' என்று, ஓவாது வெய்து உயிர்ப்பார்;
'ஐயா! இளங் கோவே! ஆற்றுதியோ நீ' என்பார்;
நெய் ஆர் அழல் உற்றது உற்றார், அந் நீள் நகரார் (1709)
இராமன் – இலக்குவன் உரையாடல்
6. கண்ணின் கடைத் தீயுக, நெற்றியில் கற்றை நாற,
விண்ணிற் சுடரும் சுடர் தோன்ற, மெய்ந்நீர் விரிப்ப,
உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க, நின்ற
அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான் (1717)
7. விண் நாட்டவர், மண்ணவர், விஞ்சையர், நாகர், மற்றும்
எண் நாட்டவர், யாவரும் நிற்க; ஓர் மூவர் ஆகி,
மண் நாட்டுநர், காட்டுநர், வீட்டுநர் வந்தபோதும்,
பெண் நாட்டம் ஒட்டேன், இனிப் பேர் உலகத்துள்' என்னா (1723)
8. காலைக் கதிரோன் நடு உற்றது ஓர் வெம்மை காட்டி,
ஞாலத்தவர் கோ மகன், அந் நகரத்து நாப்பண்,
மாலைச் சிகரத் தனி மந்தர மேரு முந்தை
வேலைத் திரிகின்றதுபோல், திரிகின்ற வேலை (1724)
9. வீறாக்கிய பொற்கலன் வில்லிட, ஆரம், மின்ன,
மாறாத் தனிச்சொல் துளிமாரி வழங்கி வந்தான்;
கால்தாக்க நிமிர்ந்து, புகைந்து, கனன்று, பொங்கும்
ஆறாக் கனல் ஆற்றும் ஓர் அஞ்சனம் மேகம் என்ன (1726)
10. மின்னொத்த சீற்றக் கனல்விட்டு விளங்க நின்ற,
பொன்னொத்த மேனிப் புயலொத்த தடக்கை யானை,
'என்னத்த! என், நீ இறையோரை முனிந்திலாதாய்,
சன்னத்தன் ஆகித் தனுஏந்துதற்கு ஏது?' என்றான் (1727)
11. 'மெய்யைச் சிதைவித்து, நின் மேல் முறை நீத்த நெஞ்சம்
மையில் கரியாள் எதிர், நின்னை அம் மௌலி சூட்டல்
செய்யக் கருதித் தடைசெய்குநர் தேவர் ஏனும்;
துய்யைச் சுடுவெங்கனலின் சுடுவான் துணிந்தேன் (1728)
12. 'நின்கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்க,
புன்கண் பொறி யாக்கை பொறுத்து, உயிர் போற்றுகேனோ-
என் கட்புலமுன் உனக்கு ஈந்துவைத்து, "இல்லை" என்ற
வன்கண் புலம் தாங்கிய மன்னவன் காண்கொல்?' என்றான் (1732)
13. நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே
பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?' என்றான். (1734)
14. ஆன்றான் பகர்வான் பினும்; 'ஐய! இவ் வைய மையல்
தோன்றா நெறி வாழ் துணைத் தம்முனைப் போர் தொலைத்தோ?
சான்றோர் புகழும் தனித் தாதையை வாகை கொண்டோ?
ஈன்றாளை வென்றோ, இனி, இக் கதம் தீர்வது?' என்றான். (1739)
15. 'நல் தாதையும் நீ; தனி நாயகன் நீ; வயிற்றில்
பெற்றாயும் நீயே; பிறரில்லை; பிறர்க்கு நல்கக்
கற்றாய்! இது காணுதி இன்று' எனக் கைம் மறித்தான்;
முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அன்னான். (1737)
16. 'நன் சொற்கள் தந்து ஆண்டு, எனை நாளும் வளர்ந்த தாதை
தன் சொல் கடந்து, எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்;
என் சொல் கடந்தால், உனக்கு யாது உளது ஈனம்?' என்றான் -
தென்சொல் கடந்தான், வடசொல்-கலைக்கு எல்லை தேர்ந்தான் (1741)
17. சீற்றம் துறந்தான்; எதிர்நின்று தெரிந்து செப்பும்
மாற்றம் துறந்தான்; மறை நான்கு என வாங்கல் செல்லா
நால் தெண் திரை வேலையின், நம்பி தன் ஆணையாலே,
ஏற்றம் தொடங்காக் கடலின், தணிவு எய்தி நின்றான் (1742)
***
அயோத்தியா காண்டம் முழுவதும் வாசிக்க -
***
No comments:
Post a Comment