பூனை - அசோகமித்திரன்
இனியும் பூனையை
விட்டுவைக்க முடியாது. அவனுடைய கிராமத்தில் பூனையைத் தொடக்கூட மாட்டார்கள்.
பூனையின் உடலிலிருந்து எப்போதும் மயிர் கொட்டிக் கொண்டேதான் இருக்கும். ஆனால் ஒரு
மனிதன் தொட்டு ஒரு மயிர் விழுந்தால், அவனுக்கு நரகம். நரகம் நிச்சயமானாலும் இங்கே
பம்பாயில் இந்த பூனை சாகத்தான் வேண்டும்.
சர்ச்கேட்டை விட்டு
இந்த பாண்ட்ராவுக்கு வந்த போதுதான் அவன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததான்?
சர்ச்கேட்டில் வேலை மட்டும் அல்ல, படுக்கையும் அந்த டீக்கடையில்தான். கோதுமை மாவு,
கடலை மாவு, பழைய எண்ணெய், வெங்காய முட்டையுடன், இன்னும் இருவருடன் கண்ணயர
வேண்டும். நான்கே மணி நேரம்தான். அதற்குள் செய்திப் பத்திரிகைப் பையன்கள்
பத்திரிகைக் கட்டுகளுடன் வந்து விடுவார்கள். பாண்ட்ராவிலும் நான்கு மணி நேரத்
தூக்கம்தான் என்றாலும், அவனுக்கேவென்று ஒரு இடம். ஒரு அடுக்கு மாடிக் கட்டடத்தின்
மொட்டை மாடியில் தண்ணீத் தொட்டிகளுக்கிடையில் தகரத் தகடுகளால் அமைக்கப்பட்ட கொட்டகை. அழுக்குப் படுக்கையென்றாலும், அவன்
மட்டுமே படுத்துக் கொள்வது. அவனுடைய லோட்டா; அவனுடைய துண்டு; அவனுடைய
பாத்திரங்கள்; அவனுடைய ஸ்டவ்; கட்டடம் தீப்பிடித்தால் தப்பிப்பதற்கென்று அமைக்கப்பட்ட
இரும்பு ஏணிப்படி, அவன் நள்ளிரவில் யார் கதவையும் தட்டாமல் மாடி போய்ச்
சேருவதற்கென்றே கட்டப்பட்டது போலிருந்தது.
கதவைத் தட்டாமல்
உள்ளே நுழைய ஒரு பூனையும் கற்றுக் கொண்டுவிட்டது. அவன் இரவில் படுக்கப்போகும்
முன், தயிர் குடிப்பதற்காகப் பால் உறை
குத்தி வைத்திருப்பான் என்பதையும் தெரிந்து கொண்டுவிட்டது. அதை ஒரு பெரிய பாத்திரம் கொண்டு கவிழ்த்து வைத்திருப்பான் என்பதையும் தெரிந்துகொண்டு, மொத்தமாக
எல்லாவற்றையும் பரணிலிருந்து கீழே தள்ளிக் குடித்துப் போகவும் தெரிந்து
கொண்டிருந்தது. முன் தினம்கூட அவன் இரவில் கதவைத் திறந்தவுடன் செருப்பு தரையில்
ஒட்டிக் கொண்டது. எவ்வளவுதான் அழுத்தி துடைத்தாலும் தரை நாறத்தான் செய்தது.
டீக்கடை வேலையின்
சகிக்க முடியாத அம்சம், மேஜையையும் தரையையும் துடைக்கும் போது எழும் நாற்றம்
இப்போது அது அவன் அறையிலேயே. அவன் ஜன்னல் கதவை மூடினான். முதலில் பூனையும் இந்த
ஜன்னல் வழியாகத்தான் வந்திருக்க வேண்டும். ஜன்னலை மூடி வைக்கத் தொடங்கியபின் இரு
நாட்கள் எல்லாம் சரியாயிருந்தது. அப்புறம் மீண்டும் இரவில் தரையைத் துடைத்துப்
படுக்க வேண்டியிருந்தது. அந்த இடத்தின் கூரையும் தகரத்தகடுதான். கதவுப் பக்கம்
சாய்ந்திருக்கும் கூரையில் கதவு இடிக்காதிருக்க, கதவுக்கும் கூரைக்கும் இடையில் ஒரு சந்து, பூனை அதை
தெரிந்துகொண்டுவிட்டது.
அவன் அந்த
இடைவெளியை மூடும்படியாக ஒரு அட்டையைத் தொங்கவிட்டான். கதவைப் பூட்டும் போது
அட்டையை தூக்கி இடைவெளி தெரிய ஒரு குச்சியை முட்டுக் கொடுத்து வைத்தான். இப்போது
பூனை உள்ளே போக முடியும். ஆனால் உடனே அட்டை அடைத்து விடும். பூனையால் வெளியே போக
முடியாது.
அன்று கடையில் இரு
முறை பகோடாவைத் தீய வைத்து விட்டான். சர்க்கரை கொட்டி விட்டது. பாக்கிச் சில்லறை
தருவதிலும் தடுமாற்றம். அவனுடைய சுபாவமான சாத்வீகத்தையும், நிதானத்தையும் ஒரு பூனை
தகர்த்துக் கொண்டிருந்தது. இன்று இரவு அது ஒழிந்து விடும்.
போலீஸ்காரன்
தெரிந்தவன்தான் என்றாலும் தடுத்து நிறுத்தினார். “கையிலே என்ன? ”
“ கரண்டி”
“இவ்வளவு நீளமா? ”
“ பால் பாத்திரம்,
எண்ணெய்ச் சட்டியெல்லாம் அகலமாகதானே இருக்கும்? ”
“ஆமா. நீ கடைக்குப்
போறியா; வீட்டுக்கு போறியா? ”
“வீட்டுக்குதான்.
கரண்டிக்கு ஒரு சின்ன வேலை இருக்கு”.
ஏணி போன்ற அந்த
இரும்புப் படிக்கட்டு இருட்டில் கண்ணுக்குத் தெரியவில்லை. தட்டுத் தடவி தான் அவன்
மூன்று மாடி ஏற வேண்டியிருந்தது. மொட்டை மாடியில் பால் போன்ற நிலவு. அந்த விசாலமான
இடத்தில் தண்ணீர் தொட்டிகள் யுத்தகளத்துக் கூடாரங்கள் போலிருந்தன.
அவன் கொட்டகைக்
கதவிடம் காது வைத்துக் கேட்டான். அமைதியாக இருந்தது. வாசல் நிலை மீது தடவிப்
பார்த்தான். குச்சியைக் காணோம். பூனை வந்திருக்கிறது.
கதவை சிறிதே
திறந்து உள்ளே புகுந்தவுடன் கதவை மூடித் தாளிட்டான். அவன்
செருப்பு மீண்டும் தரையோடு ஒட்டிக்கொண்டது. அவன் ஒரு நெருப்புக் குச்சியை
கொளுத்தினான். பாதி உறைந்த தயிர் பாதி உலர்ந்த நிலையில் கீழே சிதறிக் கிடந்தது.
இன்னொரு நெருப்புக்
குச்சி கொண்டு விளக்கேற்றினான். கரண்டியால் தரையைத் தட்டினான். எங்கோ ஒளிந்திருந்த
பூனை பரண் மீது ஏறிப் பதங்கியது. பீதியுடன் அங்குமிங்கும் பார்த்தது.
அவன் வெறியோடு
குரலெழுப்பினான். கரண்டியை உயர்த்தினான். பூனை அவனையே பார்த்தபடி இருந்தது.
ஒரு தண்ணீர்த்
தொட்டியின் குழாயை மூடுவதற்காக அடுத்த நாள் மொட்டை மாடிக்கு வந்த காவல்காரன்,
தகரத் தடுப்பு கொட்டகையின் கதவடியில் ரத்தமாக இருந்ததைப் பார்த்து, கதவை ஒரு
குத்து விட்டு திறந்தான். ஒரு பூனை வெளியே பாய்ந்து ஓடிற்று. உள்ளே கிடந்த
பிணத்தின் கையில் நீளக் கரண்டி. கழுத்திலிருந்தும் முகத்திலிருந்தும் சதை பிய்ந்து
தொங்கியது. ஒரு கண் தனியாக, எறும்பு மொய்க்கத் தரையில் கிடந்தது.






0 comments:
Post a Comment