கவிதை அரங்கு - அதியமான்

தேவதச்சன் கவிதைகள்

என் டிபன் பாக்ஸ்

புத்தரின் பற்களில்

ஒன்று

கோயிலில் இருக்கிறது

அருங்காட்சியகங்களில், சந்தைகளில்

சுறாவின் பற்கள்

நிறையவே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன

நான் என்

டிபன் பாக்ஸை

தைரியமாய் அந்தப்

பற்களுக்குப் பக்கத்தில்

வைத்து விட்டுச் செல்வேன் அவைகள்

என் டிபனை

எடுத்துத் தின்று விடாதுதானே…..

எதற்கும் நீ

பார்த்துக்கொள்

 

 

பிழை

என் பெயர் எழுத்துப்பிழை

சைக்கிள் கடை போர்டுகளில்

ஆட்டோக்களில்

பொதுக்கழிப்பறைச் சுவர்களில்

அஞ்சலி போஸ்டர்களில்

அரசு அறிவிப்புகளில்

கோயில் கொடை அழைப்பிதழ்களில்

என்னைப் பார்க்கலாம்

நான்

இன்னும்

வரலாற்றில் காணாமல் போகாத

ஒலிமனிதனின் காலச்சுவடு

ஒரு

இமை கொட்டாத பேரிருள்

ஒரு சிறு சுடர் கூட

புதிய ஒரு சொல்லின் மழலை

உதிர்ந்துவிட்ட லோயா மலர்

என்னைக் கண்டதும் உங்களுக்கு சிரிப்பாணி வரலாம்

அல்லது

கோபம் வரலாம் அவசரமாய்

என்னை அழிக்க உங்ககள் கை நீள்கிறது

அவசர அவசரமாய்

 

சொத்

கி.மு. 464 இல்

கீழே

விழுந்த ஆப்பிளின்

சொத்

என்ற

சொல்,

எந்தக் கேள்விக்கு பதில்

 

கொண்டாட்டம்

கடந்த ஐந்து நிமிடங்களாக

என் அலைபேசியில்

பொய்ச் செய்தி

ஏதும் வரவில்லை

தொலைக்காட்சியில்

அரசு

தந்திரமான திட்டங்கள்

எதுவும் அறிவிக்கவில்லை

சாலையில்

எந்தவித வீரிடலும்

கேட்கவில்லை

இந்த ஐந்து நிமிடத்தைக்

கொண்டாடுவேன்

யாரோடு?

இதோ இந்த

சாலையோரம் நிற்கும்

நோஞ்சான் செடியோடு

அதன்

கீழே

உடைந்து கிடக்கும்

கடவுளின் கடிகாரத்தோடு

***

Share:

0 comments:

Post a Comment

Blog Archive